Skip to main content

கற்பது தமிழ்


என் பையனுக்கு  5 வயது ஆனதும் நியூஜெர்சியில் எங்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று தேட ஆரம்பித்தோம். முன்பே ஆரம்பித்திருக்கலாம் ஆனால் அப்பொழுதுதான் அவன் ஆங்கிலம் ஓரளவுக்கு எழுத பேசக்கற்றுக்கொண்டிருந்ததால் அவனைக் குழப்ப வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.

ஆண்டு விழா - தீபம் 
Mahwah Temple, Pomona Temple-ல் சொல்லிக்கொடுக்கிறார்கள்  என்று ஆளாளுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள், அந்தந்த வலைதளத்தில்  பார்த்தால் உருப்படியாக ஒன்றும் இல்லை, சில இடங்களில் சமஸ்கிருதம், ஸ்லோகம் சொல்லித்தருவதாக நண்பர்கள் சொன்னார்கள் - இங்கே வசிக்கும் தமிழர்கள்  பலர் தங்கள் பிள்ளைகளை ஹிந்தி, சமஸ்கிருத பள்ளிகளில் சேர்க்க இருக்கும் ஆர்வம் தமிழின் மேல் இல்லை, மொழிக்கும் சாயம் பூசி  நிறத்துடன் பார்க்க ஆரம்பித்துவிட்டோம், அந்த அரசியலை அப்புறம் பார்ப்போம்.

TTS Picnic @ Picataway - Cricket
இங்கிருந்து  இந்தியாவிற்கு - தமிழ் நாட்டிற்குச் சென்று வருபவர்களிடம் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை வாங்கி வரச்சொல்லி சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோம், நான்கைந்து வருடங்களாக அதையே சொல்லிக்கொண்டிருந்ததாலோ என்னவோ,  உயிர் எழுத்துக்கள் சுலபமாகக் கற்றுக்கொண்டான் - மெய்யெழுத்துக்கள் கற்றுக்கொள்ள - எழுத தினறினான்.

 மனைவிக்கு நிறைய ஹிந்தி பேசும் நண்பர்கள் இங்கே உண்டு, பல சமயம் "அவர்கள் நாம் தமிழென்று தெரிந்தும் ஹிந்தியிலேயே பேசுகிறார்கள் புரியவில்லை" என்றாள், அதற்காக அருகில் இருக்கும் Maywood நூலகத்தில் தேடினேன், ஹிந்தி கற்றுக்கொள்ளும் புத்தகம் ஒன்றை பார்த்தேன் -  நேர்த்தியாக மற்றும் அழகாக ஆங்கில மொழிபெயர்ப்புடன் அச்சடிக்கப்பட்டிருந்தது பார்க்கும்போதே படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது - எனக்குக் கொஞ்சம் ஹிந்தி எழுத்துக்கூட்டி எழுதப்படிக்க தெரியும், நான்  எட்டாம் வகுப்பில் கற்றது, அதன்பின் தூர்தர்ஷன் / கிரிக்கெட் கமெண்டரி புண்ணியத்தில் கொஞ்சம் வளர்ந்தது .
ஆண்டு விழா - குல்லாய்க்காரன் நிகழ்ச்சி 

அந்த புத்தகத்தை பார்த்தபின் நாமும் அதை போல் தமிழில் செய்யலாம், ஏன் அடுத்தவர்களை எதிர்பார்க்க வேண்டும் என்று ஆரம்பித்தேன். தினம் ஒரு எழுத்து. படம், பயிற்சிப்பகுதி மற்றும் உதாரணங்களுடன் உயிரெழுத்து மட்டும் முடித்தேன், அலுவல் வேலை அதிகமாக இருந்ததால் சற்று இடைவெளிவிட்டேன், கவனம் சிதறியது, இதை ஒரு ஆளாக முடிக்க முடியாது collaborative-வாக செய்யலாம் என்று Google drive-வில் ஏற்றினேன், ஏனோ அந்த font-ஐ அது ஒத்துக்கொள்ளவில்லை, யோசித்தேன்.

 எதேச்சையாக கடந்த  செப்டம்பர் மாதம் என் மனைவி இணையத்தில் தேடும்போது திருவள்ளுவர் தமிழ் பள்ளி, எடிசன் பற்றிய link கிடைத்தது, விசாரித்தோம், வருடத்திற்கு $225, 30-வாரம்  ஒவ்வொரு ஞாயிறு மதியம் வகுப்பு. முதலில் North ஜெர்சியிலிருந்து சென்று வரமுடியுமா என்று யோசித்தோம், குளிர்காலத்தில் ஞாயிறு மதியம் சாப்பிட்டுவிட்டு மதியம் தூங்கத்தான் போகிறோம் அல்லது டிவி பார்ப்போம் உருப்படியாக இதை செய்வோம் என்று சென்றோம், சேர்த்தோம், உங்களால் ஏதாவது பங்களிக்க(volunteer) முடியுமா என்றார்கள், சைனஸ் சர்ஜரி செய்யவிருந்ததால் அப்போது எதையும் நான் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆண்டு விழா - திருவிளையாடல் 
Edison நிறைய இந்தியர்கள் - தமிழர்கள் வசிக்கும் பகுதி என்பதால் நிறைய மாணவர்கள், எனக்குத் தெரிந்து 200பேர். அதனால் வயது வாரியாக வெவ்வேறு வகுப்புகள், கலிபோர்னியா தமிழ் அகாடமி - Tamil Virtual Universityயுடன் இணைந்து பாடத்திட்டம், பாடப்புத்தகம் மற்றும் தேர்வு. இணையத்தில் பதிவு செய்துகொள்ளலாம் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவும், தேர்வு மதிப்பெண்ணையும் வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவையெல்லாம் இப்பள்ளியின் சிறப்புகளாகவும், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாகவும் எனக்குத் தோன்றியது. தன்னார்வ பெற்றோர்கள்தான் இங்கு ஆசிரியர்கள்.

ஒரிருவாரங்கள் சற்று தடுமாற்றமாக இருந்தது, பையன் சற்று வளர்ந்துவிட்டதால் புது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று சற்றே பயந்தான், பின் இரு மாதங்களில் அவர்களின் நட்பான அனுகுமுறையால் அவனுக்கு பிடித்துப்போயிற்று,  மேலும் அவனுக்கு  Edison சென்றால்  தக்ஷின் சிக்கன் பிரியாணி மற்றும் ஹாட் ப்ரெட்ஸ் சிக்கன் டிக்கா சாண்ட்விச்சும்  கிடைக்குமே. எனக்கும் Oak Tree road சென்றால்  மாம்பலம் T-நகர் சென்ற மாதிரி ஒரு உணர்வு, பிரியாணி போட்டு தமிழை வளர்க்க ஆரம்பித்தோம் . இப்பொழுது தமிழ்வகுப்பு என்றாலே வீட்டில் கொண்டாட்டம்தான்.

Picnic moment - கால்கட்டு விளையாட்டு 
ஏப்ரல் மாதத்தில் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கான பயிற்சியும்  இருக்கும், ஒவ்வொரு மாணவரின் பங்கும் ஒரு நிகழ்ச்சியிலாவது இருக்கும். கல்வியாண்டு முடிந்த பின்னும் தமிழ் பள்ளி பிக்னிக். இது பெற்றோர்களும் ஒருங்கிணைக்கும் ஒரு சந்தர்ப்பம், மேலும் ஒவ்வொருவரின் சிறு திறமைகள் கூட வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு.

கொஞ்சமே தமிழ் தெரிந்த இந்த கொஞ்சி பேசும் சிறுபிள்ளைகளை வைத்து எப்படி தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்போகிறார்களோ என்று நினைத்தேன், அதுவும் 5 மணி நேரம், ஆனால் சிறுவர்கள் நன்றாகவே அவர்களின் திறமையை நிரூபித்தனர், வண்ணமயமாக இருந்தது. அதுவும் திருவிளையாடலில் ஒளவையாராக வந்த சிறுமி மிகவும் சிறப்பாக செய்தார். ஆண்டு விழாவின்போது நிகழ்ச்சி நடத்த பெற்றோர்களின் உதவி வேண்டும் என்று கூறப்பட்டது, நானும் எனது பங்களிப்பாக நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்தேன்.



இத்தனை நாள் கோவில் உண்டியலில் காசு போடுவதுடனும் , பிறந்த நாளின் போது அனாதை இல்லங்களுக்கு பணம் கொடுப்பதுடனும் எனது சேவை மனபான்மையை வெளிநிறுத்தியிருந்தேன். இனி எனது தன்னார்வ பங்காக இனி உழைப்பாகவும் தரலாம் என்றுள்ளேன்.

திருச்சியில்,மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது புலவர் மன்றத்தேர்வில் இரண்டாவ‌தாக‌
வந்தது, அதன்மூலம் நாலடியார் புத்தகம் பரிசாகப் பெற்றது (அதை இன்று வரை 2 பக்கங்களுக்கு மேல் படித்ததில்லை ).  கல்லூரி நாட்களில் விடுமுறையின் போது வீட்டிலிருக்கையில் அதை எடுத்து படித்துப்பார்ப்பேன், ஒன்றும் புரியாது, வைத்துவிட்டு தூங்கிவிடுவேன், இதுதான் தமிழுக்கு நான் செய்தது.

அதற்குப்பின் பல வருடங்கள் கழித்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து தாமரை எழுதிய 'காக்க காக்க' படப்பாடல் கேட்கும்போது,
"ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்.." என்று ஒரு வரி வரும், அப்போது என் நண்பனிடம் சொல்வேன், "வெறுமே அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும் என்று சொன்னால் அந்த சில்லுப்பை உணர முடியாது, ஈர அலைகள் என்று சொல்லும்போது அந்த சில்லுப்பை உணர முடிகிறது, எப்படி இந்த கவிஞர்களால் வார்த்தைகளை சேர்த்துக்கோர்க்க முடிகிறது, யார் இந்த பாட்டை எழுதியது?" என்று கேட்பேன், அவனுக்கு என்னைவிட திரைப்பட ஞானம் அதிகம். இந்த டைரக்டர் எடுத்த  படம் வா பார்க்கலாம் என்று கூட்டிப்போவான். நான் அதுவரை வெறும் நடிகர்களுக்காக படம் பார்த்துவந்தேன்,  யோசிக்க ஆரம்பித்தேன். தமிழின் மீது மெல்ல ஈர்க்கப்பட்டேன்.
ஆண்டு விழா -  புகைப்படம் எடுக்கும் ஆர்வம் 
பிறகு வேலை, கல்யாணம் என்று திசைமாறி திரிந்தேன், இண்டியானாபோலிசில் தம்பியின் மூலமாக ஒரு இளம் எழுத்தாளர்  - பொறியாளர்  நண்பர் கிடைத்தார், அவர் கதைகளைப்படித்தேன் ஆர்வம் வந்தது,  சில வருடங்கள் கழித்து அவரை மறுபடியும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. எப்படி உங்களால் எழுத முடிகிறது என்றேன், "யார் வேண்டுமானாலும் எழுதலாம், நீங்களும் எழுதிப்பாருங்கள், எதையாவது எழுதுங்கள், நீங்கள் எழுதியதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று படித்துப்பாருங்கள், தானாக மொழிப்புலமை வரும்" என்றார். மேலும் சமீப காலங்களில் சமூக ஊடகத்தின் வழியாக இலவசகொத்தனார் போன்றோரின் பதிவுகளைப் பார்த்தேன், ஏதாவது நாமும் செய்வோம் என்று முயல்கிறேன். சொந்தக்கதை எதற்கு, தமிழுக்கு வருவோம்.

பிள்ளை படிப்பதனால் தமிழ்மேல் இந்த திடீர் அக்கறையா என கேட்கலாம் , இல்லை, அதற்குத்தான் முந்தைய பத்திகளில் சிறு விளக்கம். இது சுயநலம்போலத்  தோன்றினாலும், ஒத்த கருத்துடைய பல  நல்ல சுயநலன்கள் ஒன்று சேர்ந்தால் அது பொதுநலம்தானே.

அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன், 2004ல் நான் மெட்றாஸ்ல வேலை பார்த்தப்ப எங்க கம்பெனி டைரக்டர் என்னை கூப்பிட்டு, "அமெரிக்காவில் இருக்கிற எனக்குத் தெரிஞ்சவங்க வந்திருக்காங்க, அவங்க அங்க தமிழ் சொல்லி கொடுக்கிறாங்க, அவங்களுக்கு அதுக்கு புக்ஸ் ரெடி பண்ணனுமாம் நீ ஏதாவது அவங்களுக்குச் செய்யேன்" என்றார். நானும் அதுக்காக அங்கு பணிபுரிந்த ஒரு நல்ல டிசைனரிடம் அந்த பொறுப்பைக் கொடுத்து நானும் கூடவே உட்கார்ந்து ஒரு புக் செய்து கொடுத்தேன். அதன்பின், முன்பு சொன்னதுபோல் கல்யாணம் நிச்சயமாச்சு, அமெரிக்கா விசா கிடைச்சுச்சு, இங்க வந்துட்டேன். சமீபத்துல  இங்க வந்திருந்த எங்க அம்மா என் பையனோட தமிழ் புத்தகத்தை எடுத்த படிச்சிட்டிருந்தப்ப, கடைசி பக்கத்த காட்டி இந்தியாவுல இந்த கம்பெனியிலதான் உங்க அப்பா வேலை பார்த்தாங்க என்று என் பையனிடம் சொல்லிட்டு இருந்தாங்க, நானும் அந்த புஸ்தகத்த  வாங்கி பார்த்தப்ப, அன்று நான் சொன்னபடி அந்த டிசைனர் கம்ப்யூட்டரில் வரைந்த லோகோ, சந்தோசம் தாங்க முடியல என்னைக்கோ நாம செஞ்ச ஒரு செயல் இன்னைக்கு  நமக்கே பயன்படுதேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டிட்டு அந்த வாரம் பூரா எல்லோரிடமும் அதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.

TTS - Volunteers

திருவள்ளுவர் தமிழ் பள்ளியை பற்றிய விபரங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம் - திருவள்ளுவர் தமிழ் பள்ளி 

TTS Picnic - Panoramic view

2014 ஆண்டுவிழா / பிக்னிக் 





Comments

Popular posts from this blog

வெள்ளிச்சலங்கைகள்...

பொதுவாக அமெரிக்காவில் சாமானியனுக்கு எல்லாமே  எளிதில் எட்டும், இந்திய பொருள்கள், கலைகள்  உட்பட.  உதாரணமாக எந்த ஒரு புதிய‌ திரைப்படத்தையும்  முதல் நாளில்  எளிதில் பார்த்துவிடலாம், உயர்ரக மாம்பழங்கள் எப்பொழுதும் சாப்பிடலாம், இன்னும் இங்கே முனியாண்டி விலாஸ் கொத்து பரோட்டாவும் சால்னாவும் மட்டும்தான் வரவில்லை. வடக்கிந்திய, தெற்கிந்திய பொருட்கள் ஆடை ஆபரணங்கள் பெரும்பாலும் எங்கும் கிடைக்கும். இன்னும் இந்திய இதிகாச / வரலாற்று நாடகங்களுக்கான மேக்கப் சாதனங்கள் கூட கிடைக்கும். தமிழ் நாட்டில் சற்று பெரிய நகரமான திருச்சியில்கூட இவையெல்லாம் நினைத்தால்  கிடைக்காது, சரி.. சரி.. விஷயத்துக்கு வருவோம். நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன்னால் "பிரபாவதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீங்களா, அது ஒரு இந்திய‌ கிளாசிக்கல் டான்ஸ் ஷோ, ப்ராட்வே ஷோ மாதிரி இங்கு நடத்துறாங்க,அதில் கிடைக்கும் பணம் AIM for SEVA - இந்திய குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்காக சென்றடைகிறது " என்றார். "சரி பார்க்கலாம்" என்று சொல்லியிருந்தேன். சென்ற ஞாயிறு காலை திடீரென்று அவர் வீட்டுக்கு வந்து, " வரும

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்..

Band சத்தம் எங்கே கேட்டாலும் அப்படியே என்னை ஈர்க்கும் , அதில் லயிச்சு அங்கேயே நின்றிடுவேன் . இந்த band, March-past ற்கும் எனக்கும் சிறுவயதிலேயே சின்னத்தொடர்பு உண்டு . சிறுவயதில் திருச்சி காஜாமலை காலனியில் இருக்கும்போது எங்கள் வீட்டருகில்தான் Railway Protection Force பயிற்சி மையம் , பொதுவாக ஷூட்டிங் கிரவுண்டு என்போம் . இந்த March-past அணிவகுப்பு , rehearsal லெல்லாம் விடியற்காலைகளில் எங்கள் வீட்டின் முன்னிருக்கும் சாலையில்தான் நடக்கும் . வீட்டு பால்கனியிலிருந்து பார்ப்போம் . தார்ரோட்டில் கம்பீரமாய் வீரர்கள் சீராய் நடக்கும்போது அந்த பூட்ஸ்களிலிருந்து எழும் ஒலிகள் இன்னும் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது .  அப்புறம் விருத்தாசலத்தில் எட்டாங்கிளாஸ் படிக்கும்போது நான்தான் க்ளாஸ் லீடர் ☺️☺️ . March-past ல் எங்கள் க்ளாஸை வழிநடத்திச் சென்றேன் . அந்த அனுபவமும் உண்டு . அப்புறம் அவ்வளவுதான் எல்லாம் மறந்துபோயாச்சு .  நியூயார்க் வந்தபிறகு Thanksgiving Parade பற்றி கேள்விப்பட்டு மூன்றுமுறை அருகில் நின்று பார்க்க முயன்று

சித்திரச் செவ்வானம்... சிவக்கக்கண்டேன்

Panoramic view of Bear Mountain range from Perkins Observatory நியூயார்க்கில் சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளது , அதுபோல Newyorkers & Tri-state (Newyork, New Jersey, Connecticut பகுதி) மக்கள் சுற்றிப்பார்க்க மிக அருகில் இருக்கும் ஒரு recreational area, Bear Mountain - Harriman State Park. இது Tri-State area-வின் மத்தியில் இருக்கும் ஒரு வனாந்திரப்பகுதி - woodlands. நான் வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்து பார்க்கும் தூரத்திலிருக்கிறது. Hessian Lake  அனைத்து சீசனிலும் இங்கு செல்லலாம். Camping, trekking, picnic and skiing என்று மக்கள் எப்பொழுதும் செல்லும் இடம். Bear Mountain-ல் சுற்றிப்பார்க்க பல இடங்கள் இருந்தாலும் Hessian Lake area, Seven Lakes Drive, Perkins Observatory மற்றும் நம்ம ஆட்களுக்காக மலையின் அடிவாரத்திலிருக்கும் Pomona Renganathar Temple ஆகியவை முக்கியமான இடங்கள். Queue to get Beers New Jersey வந்த புதிதில் ஆபீஸ் நண்பர்கள் Fall colors பார்க்க Bear Mountain போறோம் என்றார்கள், நானும் சென்றேன், முதன் முதலாக Hessian Lake area-க்கு, Palisades Parkway(No