Skip to main content

திருத்தறசாமி !!!

 பொறியியல் இளங்கலை இறுதியாண்டு -இயந்திரவியல், 8வது செமஸ்டர், 66% எந்த அரியர்ஸும் இல்லை - all clear.  இன்னும்  3 மாதங்களில்  Engineer!.

மாமாவிற்கு தெரிந்த நண்பர்கள் வேலை  செய்யும் கம்பெனிகளில் ஏறி இறங்கி கம்பெனி ப்ராஜெக்ட் எதுவும் கிடைக்காமல் நண்பன் சடாச்சரதிற்கு தெரிந்த திருநெல்வேலி நண்பனிடமிருந்து எடுத்து வந்த ஒரு ப்ராஜெக்டை சற்று வித்தியாசமாக மாற்றி பைனல் இயர் ப்ராஜெக்டை முடிக்க பாடுபட்டுக்கொண்டிருந்தோம். மண் துகள்களை கம்பரசரிலிருந்து வரும் காற்றில் சேர்த்து  ஒரு சிறிய நாசில் மூலமாக பீச்சியடித்து கண்ணாடி மற்றும் மைக்கா ஷீட்டுகளில் துளைபோடுவது - harnessing non-conventional sources of energy, அந்த சப்ஜெக்ட் எடுக்கும் லெக்சரர்தான் எங்கள் பிராஜெக்ட் கைடு .

 1995 பிப்ரவரி மாதம், முதல் வாரம்  புதன்கிழமை மதிய இடைவேளையில் நண்பர்கள் இன்று 7th செமஸ்டர் ரிசல்ட் வருகிறது என்று  பேசிக்கொண்டிருந்தார்கள். 3.30 மணி வாக்கில் காலேஜ் முடியும் நேரத்தில் டிபார்ட்மென்ட் நோட்டிஸ் போர்டில் ரிசல்ட் வெளியிட்டிருந்தனர். எனது நம்பர் உள்பட 6 பேரின் நம்பர்கள் ரிசல்ட் பேப்பரில்  மறைக்கப்பட்டிருந்தது - withheld என்று எழுதப்பட்டிருந்தது. மற்ற 5 பேரும் என்னைவிட நன்றாக படிப்பவர்கள் - 70% மேல்  வைத்திருந்தார்கள் .

6 பேரும் சென்று காலேஜ் மேனேஜரை பார்த்ததோம், "உங்க ரிசல்ட் எல்லாம் withheld, நாளைக்கு என்னை  Universityக்கு திரும்ப வர சொல்லியிருக்காங்க, நாளைக்கு மதியம் வந்துப்பாருங்க" என்றார்.

மறுநாள் மதிய இடைவேளையில் மேனேஜரை பார்த்தோம், எனது ரிசல்ட் தவிர மற்ற 5 பேருக்கும் ரிசல்ட் வந்திருந்தது, மேனேஜர் என்னை தனியாகக் கூப்பிட்டு, "உன்னால காலேஜுக்கே கெட்ட பேரு, உன் ரிசல்ட் malpractice-ன்னு போட்டிருக்காங்க, கொசு மாதிரி இருந்துகிட்டு என்ன வேலை பண்ணியிருக்க, பேப்பர் ட்ரேஸ் பண்ணினுயா? எத்தனை அரியர்ஸ்" என்றார். "அரியர்ஸ் ஒன்றும் இல்லை" என்றேன்.  அப்போது நான் மெலிந்த தேகம் 48 கிலோதான் இருப்பேன்,  FYI - நான் பரிட்சையில் காப்பி அடித்ததே இல்லை, அதுபோல் பரிட்சை அறைக்கு நுழையும் முன் பாக்கெட்டிலிருக்கும் பஸ் டிக்கெட்டை கூட தூக்கி எறிந்துவிடுவேன்,  நான் எழுதும் டேபிளுக்கு அடியில் ஏதாவது பேப்பரோ-புத்தகமோ இருக்கிறதா என்று பார்த்துவிட்டுதான் அமர்வேன்.

மதியம் ஹாஸ்டலுக்கு சாப்பிட சென்றேன், சாப்பாடு இறங்கவில்லை, முந்தைய செமஸ்டர் மார்க் ஷீட்டுகளை எடுத்துக்கொண்டு திரும்பவும் மேனேஜரைப் பார்த்தேன்,  "HOD, Principal, Director-ரிடம் லெட்டர் வாங்கிட்டு போய் யுனிவர்சிட்டியில Controller of Examination-ஐ போய் பாரு" என்றார்.
அதற்குமுன் மெட்ராஸ் யுனிவர்சிடியை ஓரிரு முறை மெரீனா செல்லும்போது தூரத்திலிருந்து பார்த்துள்ளேன், அவ்வளவுதான் பரிச்சயம் .

 பிறகு வகுப்பிற்குத் திரும்பிவந்தேன், அருகில் அமர்ந்திருந்த ரவீந்திரன் மற்றும் சீனிவாசனிடம் சொன்னேன்.  ரவீந்திரன் - day scholar- அதற்கு முந்தைய வாரம்தான் யுனிவர்சிடிக்கு சென்று அவனுடைய மார்க் பார்த்து வந்திருந்தான். "கவலைப்படாத மாப்ள எனக்கு அங்கு வேலை செய்ற ஒரு ப்யூனை தெரியும் போய் பார்க்கலாம்" என்றான். Asst. HOD-ஐ  பார்த்தேன், நடந்தவற்றை சொன்னேன்,  மாதிரி லெட்டர் எழுதி கொடுத்தார்,  பிறகு HOD-யை பார்த்தேன், "இதுவரை உன்னை நான் பார்த்ததில்லையே, நிஜமாலும் நீ பைனல் இயரா" என்றார், முந்தைய செமஸ்டர் மார்க் ஷீட்டுகளை காட்டினேன், பார்த்துவிட்டு "its strange" என்று கூறிவிட்டு கையொப்பமிட்டார். பின் பிரின்சிபாலிடம் சென்றேன், அவர் ஒரு மணி நேரம் காக்க வைத்துவிட்டு உள்ளே கூப்பிட்டார், திட்டிவிட்டு அவரும் கையழுத்து போட்டார், பிறகு டைரக்டரை பார்த்து அவரிடமும் கையெழுத்து வாங்கினேன்.

எல்லா இடத்திலும் முந்தைய செமஸ்டர் மார்க் ஷீட்டுகள்தான் கைகொடுத்தது. இவையனைத்தையும் முடிக்க வெள்ளிக்கிழமை ஆயிற்று, சனி ஞாயிறு விடுமுறை. என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பொழுது வீட்டில் போன் வசதிகிடையாது, கீழ்  வீட்டில் சொல்லித்தான் அப்பா அம்மாவிடம் பேச வேண்டும், திங்கட்கிழமை யுனிவர்சிட்டி சென்று பார்த்துவிட்டு அப்பாவிடம் பேசலாம் என்றிருந்தேன்,  மூன்று நாட்களும் சரியாக தூங்கவில்லை, சாப்பிடவில்லை.  தூரத்து சொந்தக்காரர் ஒருவர் ரிடையர்டு Education Secretary, அவர் மூலமாக ஏதாவது சிபாரிசு கேட்கலாமா என்று மனது பல சிந்தனைகளில் அலைந்தது. ஆனால் மனதிற்கு ஒரே ஆறுதல், ரிசல்ட் ஒட்டியிருந்த பேப்பரில் எனது நம்பருக்கு நேராக இருந்த வரிசை எண்களின்  கடைசி எழுத்து அத்தனையும் 's' என்ற எழுத்தில் முடிந்திருந்தது , அதனால் அனைத்து சப்ஜெக்டிலும் நான் பாஸ்தான் என்று மனசை தேற்றிகொண்டேன். சுனில்,  முத்துகுமார், முருகானந்தம், கார்த்தி, மங்களராஜ், பாபு, பாண்டித்துரை, பக்கத்து ரூம் ஜுனியர்ஸ் பாலாஜி & ஜெயக்குமார்   என்று ஒவ்வொருவராக எனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக்கொண்டிருந்தனர்.

திங்கட்கிழமை காலை ரவீந்திரனை அழைத்துக்கொண்டு யுனிவர்சிடிக்கு சென்றேன். Controller of Examination ரூமை கண்டுபிடித்து அங்கு நின்றோம், அவருடைய உதவியாளர்,"Controller of Examination ஒரு வாரத்திற்கு லீவு, வேண்டுமானால் உங்கள் கடிதத்தை என்னிடம் கொடுத்துச் செல்லுங்கள்" என்றார்,  எனக்கு மனமில்லை, லெட்டர் அவர் கைக்கு போகும் என்ற நம்பிக்கையுமில்லை .  பிறகு  ரவீந்திரனுக்குத் தெரிந்த அந்த புயூனை பார்த்தோம், அவர் "ஒரு 50 ரூபாய் கொடு " என்றார், கொடுத்தேன்  - வாழ்க்கையில்  முதன்முதலில் என்கையால் கொடுத்த லஞ்சம்.
"நீ withheldடா இல்ல malpracticeஸா " என்றார், "ரிசல்ட் வந்த பேப்பர்ல withheld-தான் போட்டிருக்கு" என்றேன்.  என்னை கை காண்பித்து " நீ மட்டும் section E போய் பாரு " என்றார், சென்றேன்.

நான்கு கிளர்க்குகள் - 2 ஆண், 2 பெண் (பரவாயில்லை.. இங்கே அப்போதே 50% ஒதுக்கீடு ) - கதவோரம் இருந்த மேசையை  சுற்றி உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர், முன்னிருந்த ஒரு பெண் கிளர்க்கிடம் நடந்ததை சொன்னேன், அவர் அருகிலிருந்த ஆண் கிளார்க்கை பார்த்தார், அவர் "நீ எந்த காலேஜுடா " என்றார், சொன்னேன் , "இல்லயே , அந்த காலேஜுல எந்த ரிமார்க்கும் இல்லையே " என்று கூறிவிட்டு "உன் நம்பர் என்ன" என்றார், "811856"சொன்னேன், "கொஞ்சம் இரு" என்று சொல்லிவிட்டு பக்கத்து அறைக்கு சென்றார் , அதற்குள் மற்ற கிளர்க்குகள் என்னை almost ராகிங் செய்து கொண்டிருந்தனர். திரும்பிவந்த அந்த கிளர்க் ஒரு பேப்பருடன் வந்தார், "நம்பர் மாறி போச்சு,  தப்பு செஞ்சவன் வேற காலேஜ் - 811356 -இந்தா உன் மார்க் , ஒரிஜினல் மார்க் சீட் 3 நாளில் வரும்" என்றார். மார்க்கை கம்ப்யூட்டரில் ஏற்றும் கிளர்க்கு 3-ஐ 8 ஆக்கியதால் எனக்கு வந்தது இந்த பிரச்சனை.

அதற்குள் முன் வாசலில் சந்தித்த ப்யூன் ரவீந்திரனுடன் உள்ளே வந்தார், "ஏம்பா இந்த வயசுலேயே பொய் சொல்றியா , உன் ப்ரண்டு நீ malpractice பண்ணியிருக்கன்னு சொல்றான் " என்றார். ரவீந்திரனும் என்னை பார்த்து "சாரிடா , தெரியாம பேசும்போது சொல்லிட்டேன் " என்றான். "பரவாயில்லடா, ரிசல்ட் கிடைச்சிடுச்சு , all clear" என்றேன். அதற்குள் மற்ற கிளர்க்குகள் "இல்லபா , அவன் தப்பு பண்ணல , அவன உட்டுடு" என்றனர்.  மறுநாள் மேனேஜர், பிரின்சி , HOD எல்லோரிடமும் மார்க் சீட்டை காண்பித்தேன் - 72%.

பத்தாம் வகுப்பு படிக்கும்போதே எங்கள் வாத்தியார் விளையாட்டாக சொல்லியிருக்கிறார்,  "நாங்க பேப்பர் திருத்தும்போது என்ன மூடுல இருப்போம்னு தெரியாது, வீட்டுல  பிரச்சனைன்னா அன்னைக்கு மாட்டுற பேப்பர்ஸ் எல்லாம் அதோகதி தான். அதனால கையெழுத்து நல்லா இருக்கனும், கையெழுத்து நல்லா இருந்தாலே பெரும்பாலோருக்கு நல்லா  படிக்கிற பையன்னு தோனும், அப்புறம் தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும், பேப்பர்ல எங்கேயும் கேப் விடாமல் எழுதுங்க - இல்லாட்டி எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு நீங்களே காட்டினது மாதிரியிருக்கும் , அப்புறம்  சாமிய கும்பிடும்போது பேப்பர் திருத்தற சாமியையும் சேத்து வேண்டிக்குங்க " என்பார், நாங்கள் சிரிப்போம், அது நிஜமாயிற்று !.

 எனது அடுத்த ரிசல்ட் வரும்போது  பேப்பர் திருத்தறசாமியை மட்டுமல்ல, ப்யூனிலிருந்து - மார்க்கை கம்ப்யூட்டரில் ஏற்றும் கிளர்க்குவரை அனைத்து சாமியையும் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தேன்.

அரசு மற்றும் கல்வி இயந்திரத்தின் மீது நம்பிக்கை அப்போதிலிருந்து விட்டுப்போனது.

Comments

Post a Comment

Popular posts from this blog

Panorama பக்கம்

Amateur புகைப்படக்காரர்களுக்கு iPhone சில வேலைகளை சுலபமாக்கியுள்ளது, அதில்அருமையான ஒன்று Panoramio, சாதாரண கண் காணும் காட்சியை விட அகலமாக படம் எடுப்பது. இது புகைப்படத்திற்கும் புதிய  பரிமாணத்தை அளிக்கும். காட்சியும் புது வடிவம் பெற்று விவரமான தோற்றத்தை கொடுக்கும். நான் கிளிக்கிய சில panoramic view படங்கள் இங்கே.

ஓ.. பக்கம்

2004 நவம்பரில் ksrk எனது தம்பி மூலமாக எனக்கு அறிமுகம் , அவர் எழுத்தாளரும்கூட என்று அறிமுகம் செய்தான் . சில வருடங்கள் கழித்து அவருடைய வலைப்பதிவுகள் / கதைகள் படித்தேன் . அவருடைய வெப்ஸைட்டில் அவரின் டிவிட்டர் ஐடியைப் பார்த்து சரி நாமும் ட்விட்டரில் ஒரு கணக்குத் தொடங்குவோம் எனத்தொடங்கி பின்தொடர்ந்தேன் .  பின் ட்விட்டர் ரெகமெண்ட் செய்ய @elavasam கொத்தனாரைப் பின்தொடர்ந்தேன் . அவர் ட்விட்டுகள் ஜாலியா இருந்தது . பின் அவர் ஜாலியா தமிழ் இலக்கணம்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று தெரியவந்தது . பள்ளியில் தமிழ் பாடத்தில் பல சமயம் க்ளாஸ் ஃபர்ஸ்ட் எடுத்துள்ளேன் , புலவர் மன்றத்தேர்வில் பள்ளியில் முதலாக வந்து பரிசெல்லாம் வாங்கியுள்ளேன் . பள்ளிப்படிப்பு முடிந்ததும் 1991 னோட தமிழ் இலக்கணம் , இலக்கியம் எல்லாம் விட்டுப்போய் மறந்துபோச்சு .  பதினெட்டு வருசம் கழித்து தமிழ் இலக்கணம் அதுவும் ஜாலியா கத்துக்கலாம்னு சொல்லுறாரேன்னு ஒரு ஆர்வம் வந்துடுச்சி , ஆனால் எப்படி அந்த புத்தகத்தை வாங்குறதுன்னு தெரியல . அப்ப நி...